கார்த்திகா கைது - தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியினர் கைது செய
கனிமொழி


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய்யின் பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட தகராறு, சாலை மறியல் மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவைக் கைது செய்திருப்பதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவைத் தமிழக வெற்றிக் கழக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொள்கை முரண்பாடுகள் இருந்தபோதிலும், திமுக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே மாற்றுக் கட்சியினரின் விமர்சனங்கள் எதிர்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய தவெக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் நாள்தோறும் இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை அரசு கைவிட வேண்டும் எனக் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், முறையான நிர்வாகத்தை வழங்குவதிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam