Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 அக்டோபர் (ஹி.ச.)
நிலக்கடலை என்பது விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய முக்கிய எண்ணெய்வித்துப் பயிராகும். ஆனால் விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர் கூலி மற்றும் நீர்ப்பாசனம் போன்ற செலவுகள் அதிகரிப்பதால் விவசாயிகளின் லாபம் குறைகிறது.
சரியான ரகத் தேர்வு, மண் பரிசோதனை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சாகுபடிச் செலவைக் குறைத்து, மகசூலையும் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.
நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெறுவதற்கு ஏற்ற ரகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். எல்லா ரகங்களும் எல்லா மண் மற்றும் பருவநிலைகளுக்கும் ஏற்றதாக இருக்காது.
உங்கள் பகுதியின் மண் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற ரகத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
மண் பரிசோதனை செய்யாமல் உரங்களை அதிகமாக இடுவது செலவை உயர்த்துவதோடு, பயிரின் வளர்ச்சியையும் பாதிக்கலாம். எனவே விதைப்பதற்கு முன் மண் பரிசோதனை செய்ய வேண்டும்.பரிசோதனை முடிவுக்கு ஏற்ப அடியுரம் மற்றும் மேலுரங்களை இட வேண்டும்.
நிலக்கடலை சாகுபடியில் களைகள் பயிருடன் நீர், ஊட்டச்சத்து மற்றும் சூரிய ஒளிக்குப் போட்டியிடுகின்றன. எனவே, ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் களைகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
விதைத்த 20–25 நாட்களில் முதல் களையெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப 35–40 நாட்களில் அடுத்த களையெடுப்பைச் செய்யலாம்.
நிலக்கடலைப் பயிருக்கு எல்லா நாட்களிலும் ஒரே அளவு நீர் தேவையில்லை. பூக்கும் பருவம், ஊசி இறங்கும் பருவம் மற்றும் காய் வளர்ச்சிப் பருவங்களில் மண்ணில் போதிய ஈரப்பதம் இருப்பது அவசியம்.
Hindusthan Samachar / LOGESHWARI V