கும்பகோணம் அருகே 266 பட்டாக்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் - 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கும்பகோணம், 20 அக்டோபர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறை கிராமத்தில் பல தலைமுறைகளாக ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குடியிருப்பு மனைகள் 2024-ஆம் ஆண்டு 108 வைணவத் திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை
A protest near Kumbakonam


கும்பகோணம், 20 அக்டோபர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறை கிராமத்தில் பல தலைமுறைகளாக ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குடியிருப்பு மனைகள் 2024-ஆம் ஆண்டு 108 வைணவத் திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானவை எனக் குறிப்பிட்டு, 266 பட்டாக்கள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

போலி ஆவணங்களின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், இந்த நடவடிக்கையால் தங்களது நீண்டகாலக் குடியிருப்பு உரிமை பாதிக்கப்படக்கூடும் எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட 266 பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும், ஐந்து தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு முறையான குடிமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய மாதர் சங்கத் துணைத் தலைவர் வாசுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பட்டா மாற்றத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை அதிகாரிகள், கோயில் செயல் அலுவலர் மற்றும் கணக்கர் ஆகியோர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

பல தலைமுறைகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் ஏழை மக்களின் குடியிருப்பு உரிமையைப் பாதுகாக்கவும், பட்டா தொடர்பான சர்ச்சைக்கு உரிய தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / LOGESHWARI V