கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு 60 நாள் பரோல் உத்தரவை உடனடியாக ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் - பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வலியுறுத்தல்
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.) கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 5 பேர் 60 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர்களின் பரோலை உடனடியாக ரத்து செய்து மீண்டும் சிறையி
சேகர்


கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 5 பேர் 60 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் பரோலை உடனடியாக ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் 12 இடங்களில் நிகழ்ந்த 13 குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பலர் நிரந்தர ஊனமுற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு மற்றும் சொந்தக் காரணங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் 5 பேருக்கு 60 நாள் பரோல் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தகைய முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என எஸ்.ஆர். சேகர் விமர்சித்துள்ளார்.

மேலும், கோவையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் காவலர் செல்வராஜ் கொலை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கோவையில் மீண்டும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பாக அவர் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு ஆதாரங்கள் எதையும் அறிக்கையில் முன்வைக்கவில்லை.

திமுக அரசைத் தொடர்ந்து விமர்சித்துள்ள எஸ்.ஆர். சேகர், தற்போதைய தமிழக அரசும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள 5 பேரின் பரோலை உடனடியாக ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam