மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்தி
வீரபாண்டி


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவச் சேவை வழங்கவும், அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்கவும் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவுறுத்தல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளைப் போலவே தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தடையற்ற சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் போதிய அளவில் இருப்பில் வைத்திருப்பதுடன், எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல்களையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கட்டண முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது எனத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P