கெலவரப்பள்ளி அணையா? கோல்ஃப் மைதானமா? ஆகாயத்தாமரைகளால் மூழ்கிய அணை - சமூக ஆர்வலர்கள் வேதனை!
ஓசூர், 21 அக்டோபர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகள், நீர்ப்பரப்பின் பெரும்பகுதியை மூடியுள்ளன. இதனால் நீரின் இயல்பான சுழற்சி பாதிக்கப்படுவதுடன், நீர்நிலையின் சுற்றுச்சூழல் நிலை குறித்தும்
Kelavarapalli Dam


ஓசூர், 21 அக்டோபர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகள், நீர்ப்பரப்பின் பெரும்பகுதியை மூடியுள்ளன. இதனால் நீரின் இயல்பான சுழற்சி பாதிக்கப்படுவதுடன், நீர்நிலையின் சுற்றுச்சூழல் நிலை குறித்தும் கவலை எழுந்துள்ளது. அணையில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்திருப்பது, நீர்வளத்தைச் சார்ந்துள்ள விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர், கெலவரப்பள்ளி அணைக்கு வந்து சேர்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நீரின் தரம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அணையின் நீர்ப்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால், நீர் தடையின்றி வெளியேறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டால், நீரின் தரம் மேலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உருவாகலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.

கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றுவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீரின் இயல்பான ஓட்டத்தை உறுதிப்படுத்துவதுடன், அணையில் உள்ள நீரின் தரத்தையும் பரிசோதித்து, மாசுபாட்டுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, அணையைத் தொடர்ந்து கண்காணித்து உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, ஆகாயத்தாமரைகளை அகற்றுவதுடன் நீர்நிலையைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V