மணிப்பூரில் பாஜகவின் திறமையின்மையால் மீண்டும் ரத்தக்களரி - மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்!
புதுடெல்லி, 21 அக்டோபர் (ஹி.ச.) மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டுள்ள வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறியதா
Congress President Mallikarjun Kharge severely criticized the BJP, stating that its incompetence has led to renewed bloodshed in Manipur


புதுடெல்லி, 21 அக்டோபர் (ஹி.ச.)

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டுள்ள வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறியதாக பாஜக அரசை விமர்சித்துள்ள அவர்,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மூன்று முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், 2023 மே மாதம் முதல் மணிப்பூரில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 24,530 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொடர்ந்து வன்முறையின் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, முதலமைச்சர் மாற்றம் மற்றும் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமைக்கப்பட்டது போன்ற அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க முடியவில்லை என கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

வன்முறை தொடங்கிய பின்னர் சுமார் 29 மாதங்களாகப் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

2023 ஜூன் மாதம் அமித் ஷாவால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு தற்போது என்ன நிலையில் உள்ளது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

நிவாரண முகாம்களில் நிகழ்ந்த 31 இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாவதாக, 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் முதலமைச்சர் மாற்றத்துக்குப் பிறகும் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு யார் பொறுப்பேற்பார்கள் என அவர் வினவியுள்ளார்.

மணிப்பூர் மக்களுக்கு நீதி, கண்ணியம், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் நீடித்த அமைதி கிடைக்க வேண்டும் என கார்கே வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லை மாநிலத்தின் நிலைத்தன்மை அரசியல் நலன்களுக்காகப் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V