Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 21 அக்டோபர் (ஹி.ச )
லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் (46), பிரேமா (23) தம்பதியினர், பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்தும் யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குழந்தையுடன் அப்பகுதியில் சாலையோரத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி, சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மகேஸ்வரி திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. குழந்தையைக் காணாத பெற்றோர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, குழந்தையை மீட்பதற்காக காவல்துறையினர் முதற்கட்டமாக நான்கு தனிப்படைகளை அமைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், குழந்தை காணாமல் போனது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்காததால் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி, வேலூர், பொன்னை, வள்ளிமலை, சிப்காட், ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மங்கைக்கரசி கூறுகையில்,
பல்வேறு வழித்தடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையைப் பத்திரமாக மீட்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தை மாயமாகி பல நாட்களைக் கடந்தும் அதன் இருப்பிடம் குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால் பெற்றோர் மிகுந்த வேதனையில் உள்ளனர். குழந்தை எங்கு சென்றது, என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை மாயமான சம்பவம் அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி குழந்தையை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V