Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 21 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் கடைவீதியில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய சங்கத்தினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின்போது, வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், சம்பா சாகுபடிக்கு நிபந்தனையின்றிப் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 இடங்களில் இடதுசாரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடியைப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும், டெல்டா மாவட்டங்களின் சாகுபடித் தேவைக்குத் தொடர்ந்து காவிரி நீரைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை–தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் போராட்டக்காரர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவானது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கருதிய வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V