Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 அக்டோபர் (ஹி.ச.)
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வினோத் ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி பெரியகுளத்தில் ஜனநாயக ரீதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வினோத் ராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அனுமதியின்றி பதாகை வைத்ததாகவும், காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பெரியகுளம் காவல்துறையினர் தன் மீது வழக்குப் பதிவு செய்து, தேனி மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிமுகப்படுத்தாததற்கு எதிராக மனுதாரர் போராட்டம் நடத்திய நிலையில், அனுமதியின்றி பதாகை வைத்தது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் புகார்தாரரும் சாட்சிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இத்தகைய சூழலில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிப்பது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமமாகும் எனக் கருத்துத் தெரிவித்தார்.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் இந்த நிலை பொருந்தும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam