மழைநீர் வெள்ளம் போல தேக்கம் தடுப்புச்சுவரை உடைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தடுப்புச்சுவரை உடைத்து அ
அன்புமணி


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தடுப்புச்சுவரை உடைத்து அகற்றுவதுடன், இத்திட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவரும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழைநீர் சதுப்புநிலத்துக்குள் செல்ல முடியாமல் வெள்ளம் போலத் தேங்கி நிற்கிறது. நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர் காரணமாக மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்படுவதுடன், சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 3 கி.மீ. நீளத்துக்கு 6 அடி உயரத்தில் தடுப்புச்சுவரும், அதன் உட்புறத்தில் 2 கி.மீ. நீளத்துக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. தடுப்புச்சுவரும் நடைபாதையும் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளிலும் சென்னையின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்குச் செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், செப்டம்பர் 6-ஆம் தேதி பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் செப்டம்பர் 12-ஆம் தேதி தானும் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது, திட்டம் குறித்து விளக்கம் அளித்த வனத்துறை அதிகாரிகள், தடுப்புச்சுவருக்குக் கீழே இராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதால் மழைநீர் எளிதாக வெளியேறும் என்று தெரிவித்ததாகவும், ஆனால் அண்மையில் பெய்த மழைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள நீர்த்தேக்கம் அந்த விளக்கம் தவறானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 17-ஆம் தேதி சென்னையின் சில இடங்களில் 30 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்தபோதிலும், அடுத்த சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீர் முழுமையாக வடியவில்லை. சதுப்புநிலத்தில் கட்டப்பட்டுள்ள நீர்வழித் தடைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு நாள் பெய்யும் மழைக்கே பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை பகுதிகளில் இந்த அளவுக்கு மழைநீர் தேங்கினால், வடகிழக்குப் பருவமழையின்போது தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்தால் வேளச்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தமிழக அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களைத் தகர்த்து அகற்ற வேண்டும்.

மேலும், இத்திட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam