பறவைக் காய்ச்சல் எதிரொலி- வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்களுக்கு மூடல்!
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 (H5N1) வகை பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்று (அக். 22) மற்றும் நாளை (அக். 23) ஆகிய 2 நாட்களுக்கு பூங்கா மூடப
வண்டலூர் பூங்கா


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்வாழ் பறவைகளுக்கு எச்5என்1 (H5N1) வகை பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்று (அக். 22) மற்றும் நாளை

(அக். 23) ஆகிய 2 நாட்களுக்கு பூங்கா மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், பூங்காவில் கிருமிநாசினி தெளித்தல், பறவைகள் வசிக்கும் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 3 முதல் 9-ஆம் தேதி வரை 7 நீர்வாழ் பறவைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதிக்குப் பிறகு பறவைகள் உயிரிழப்போ, நோய் அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பறவைகளின் உடல்நிலையைக் கண்காணிக்கவும் இந்தத் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பூங்காவுக்கு வருவதைத் தவிர்த்து, நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam