Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 22 அக்டோபர் (ஹி.ச.)
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் நடைபெறும் புகழ்பெற்ற தசரா விழாவின் ஒரு பகுதியாக, முரியா தர்பார் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
இதனை வரவேற்றுள்ள மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, பழங்குடியின மக்களுடன் குடியரசுத் தலைவர் நேரடியாகக் கலந்துரையாடுவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார்.
பஸ்தர் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய சமூகத் தலைவர்களான மாஞ்சிகள், சல்கிகள், கடாக்கள், பெர்மாக்கள் மற்றும் பூஜாரிகள் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரால் அவரது இல்லத்திற்கு அழைக்கப்பட்டதாக விஜய் சர்மா கூறினார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடியினத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளித்ததுடன், அவரே நேரடியாக உணவு பரிமாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற 64 பேரைக் குடியரசுத் தலைவர் தனிப்பட்ட முறையில் கௌரவித்ததாகவும், பஸ்தர் பகுதியிலிருந்து வந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உரையாடியதாகவும் விஜய் சர்மா தெரிவித்தார். இந்த நிகழ்வை நேரில் பார்த்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது, பஸ்தர் பகுதியில் அமைதியும் வளர்ச்சியும் மீண்டும் நிலைபெற்றுள்ளதாக அங்கிருந்த சமூகத் தலைவர்கள் தெரிவித்ததாக விஜய் சர்மா கூறினார்.
மாவோயிசத்தின் தாக்கம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அப்பகுதியில் வன்முறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் நிலை மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பஸ்தர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முரியா தர்பாரில் பங்கேற்குமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்ததாக விஜய் சர்மா விளக்கினார்.
துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்த தகவலின்படி, குடியரசுத் தலைவர் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்து, அடுத்த நாள் நடைபெறும் முரியா தர்பார் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் முரியா சமூகத்தினர், மாஞ்சிகள் மற்றும் சல்கிகள் உள்ளிட்ட பாரம்பரியத் தலைவர்களுடன் அவர் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார்.
நாட்டில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது முதல்முறை என விஜய் சர்மா குறிப்பிட்டார். பழங்குடியின மக்களின் பாரம்பரியத்திற்கும் அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புனித மண்ணிற்கு வருகை தரும் குடியரசுத் தலைவரை வரவேற்பதாகவும், அவரது பங்கேற்பு மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாகவும் துணை முதல்வர் விஜய் சர்மா கூறினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V