கூடலூர் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய ஆண் புலி!
நீலகிரி, 22 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் உள்ள லாரிஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் புலி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. உயிரிழப்புகளுக்குக் க
Tigger


நீலகிரி, 22 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் உள்ள லாரிஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் புலி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

உயிரிழப்புகளுக்குக் காரணமான புலியைப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்துப் புலியைக் கண்காணித்து வந்தனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, செப்டம்பர் 18ஆம் தேதி வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு புலி சிக்கியது.

இதற்கிடையே, கூடலூரைச் சுற்றியுள்ள சில்வர் கிளவுட் மற்றும் ஓவேலி பகுதிகளில் வயதான புலி ஒன்று சுற்றித் திரிவதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

இதனால், அப்பகுதிகளில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மேலும், முதுமலை, கூடலூர் மற்றும் ஓவேலி பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டுகளை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

புலியின் நடமாட்டம் குறித்த தகவல்களின் அடிப்படையில், தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், சில்வர் கிளவுட் அருகே உள்ள ஹாலல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை புலி சிக்கியது. முதற்கட்டத் தகவலின்படி, அது ஆண் புலி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூண்டில் சிக்கியுள்ள புலியின் வயது, உடல்நிலை உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

மேலும், புலியைப் பாதுகாப்பாகக் கையாள்வது மற்றும் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V