திருவாலங்காடு சாலையில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான புளியமரம்!
திருத்தணி, 22 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் மரங்களின் வேர்ப்பகுதிகள் ஈரப்பதம்
Tree rain


திருத்தணி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், சில இடங்களில் மரங்களின் வேர்ப்பகுதிகள் ஈரப்பதம் காரணமாகப் பலவீனமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை கனகம்மாசத்திரம் அருகே முத்துக்கொண்டாபுரம் பகுதியில் திருவாலங்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

மரத்தின் வேர்ப்பகுதி பலவீனமடைந்திருந்ததே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் நிலை உருவானது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் விழுந்து கிடந்த மரத்தைத் துண்டுகளாக அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கையால் சாலையில் கிடந்த மரம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது.

காலை நேரத்தில் மரம் சாய்ந்து விழுந்தபோதிலும், அந்த வழியாக வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் உயிரிழப்போ, வாகனச் சேதமோ ஏற்படவில்லை. மரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் சீரானது.

Hindusthan Samachar / LOGESHWARI V