குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அருகே இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சி
Youth beaten to death with a stone near Kulasekarapattinam Dasara festival


தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற திருவிழா நேற்று நிறைவடைந்தது.

இந்த நிலையில், உடன்குடி அருகே உள்ள வில்லிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (26) என்பவர், தசரா திருவிழாவைக் காண்பதற்காக நேற்று இரவு குலசேகரன்பட்டினத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்குப் பிறகு, மகிஷாசுரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைப் பகுதியை ஒட்டிய பூங்கா சாலை வழியாக வேல்முருகன் தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை உருட்டிச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது அங்கிருந்த சில மர்ம நபர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதாகவும், அப்போது மர்ம நபர்கள் கல்லால் வேல்முருகனைத் தாக்கியதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், உயிரிழந்த வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலைக்கான காரணம் என்ன, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் மர்ம நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தசரா திருவிழா நிறைவடைந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V