கன்னியாகுமரியில் கனமழை எதிரொலி -திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
கன்னியாகுமரி, 22 அக்டோபர் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்யும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித
Heavy rain in Kanyakumari: Thirparappu Falls flooded


கன்னியாகுமரி, 22 அக்டோபர் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்யும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கோதையாற்றில் அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக வேகத்துடன் கொட்டுகிறது. வழக்கமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அருவி, தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதுகாப்பற்ற சூழலில் காணப்படுகிறது.

அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால், அருவிப் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள நீச்சல் குளம், கல்மண்டபம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு அருகில் செல்வது ஆபத்தானதாக மாறியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையும் நிலவுகிறது.

திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அருவிப் பாதுகாவலர்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும், அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரைக் கண்டு ரசிப்பதுடன், புகைப்படங்களும் செல்ஃபிகளும் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்கின்றனர்.

தொடர் மழையின் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மழை தொடரும் நிலையில், அருவியின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V