Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுக்குச் செல்வதற்கு முன்பாக, படகுகளில் மீன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஐஸ் கட்டிகள் ஏற்றப்படுவதுடன், தேவையான டீசலும் நிரப்பப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான தொழிலாளர்கள் மாலை அணிந்திருப்பதால், அவர்கள் வழக்கமான பணிக்கு வரவில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக, விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றவும், டீசல் நிரப்பவும் போதிய பணியாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால், மீன்பிடிக்கச் செல்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உருவானது.
இதையடுத்து, இன்று தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையும், படகுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளத் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் மீன்பிடித் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / LOGESHWARI V