Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வநாத செல்வி அம்மன் திருக்கோயிலில் தசரா பத்தாம் நாள் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
சிந்துபூந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில், ஆண்டுதோறும் வருஷாபிஷேகம், திருமாலை பூஜை, பால்குட விழா, கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், விழாக்களின் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
தசரா விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் இரவில், ஸ்ரீ விஸ்வநாத செல்வி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டின் தசரா நிறைவு நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்மனுக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அதிமுக மாநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் பரணி. ஏ. சங்கரலிங்கம் தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக அவைத் தலைவர் நைனா முத்துராஜ், 30-ஆவது வட்டக் கழகச் செயலாளர் எஸ். நல்லபெருமாள், சைவ வேளாளர் சங்கத் தலைவர் கார்த்திக் சிவக்குமார், கோயில் நிர்வாகி தெய்வநாயகம் பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை 30-ஆவது வட்டக் கழகப் பிரதிநிதி எம். சேதுராமலிங்கம் என்ற ஆட்டோ குமார், எம். சங்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
பக்தர்கள் திரளாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, ஆன்மிகச் சிறப்புடனும் அன்னதான சேவையுடனும் நிறைவடைந்தது.
Hindusthan Samachar / LOGESHWARI V