வீரபாண்டி தடுப்பணையில் சேதமடைந்த ஷட்டர்- 400 ஏக்கர் நெல் சாகுபடிக்குப் பாதிப்பு
வீரபாண்டி, 22 அக்டோபர் (ஹி.ச.) தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தால், விவசாயத்திற்குத் தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Damaged shutter at Veerapandi check dam! 400 acres of paddy cultivation affected?


வீரபாண்டி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையின் ஷட்டர் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தால், விவசாயத்திற்குத் தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த கட்டமைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீரபாண்டி, சத்திரப்பட்டி, வயல்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி கிடைத்து வருகிறது.

இப்பகுதிகளில் 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை இந்தத் தடுப்பணை மூலம் பெறுவதால், அதன் கட்டமைப்பு சீராக இருப்பது விவசாயிகளுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் அமைந்துள்ள பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியின் கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷட்டரை முறையாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற முடியாமல் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

சேதம் நீடித்தால் பாசனப் பணிகள் பாதிக்கப்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், தடுப்பணைப் பகுதிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சேதமடைந்த ஷட்டர் பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்ட இடத்திலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாவிட்டால், குழந்தைகள் உள்ளிட்டோர் தவறி விழுந்து விபத்துகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த ஷட்டர் பகுதியையும் மண் சரிவையும் உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பாசனத்திற்குத் தடையின்றித் தண்ணீர் கிடைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V