Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதன் இயக்குநர் தேவநாதன் யாதவ், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் சுந்தர்மோகன், ஜி.கே.முத்துகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக தேவநாதன் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே 8 வார கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரி அவரது தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர்மோகன், ஜி.கே.முத்துகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்ததுடன், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தேவநாதன் யாதவ் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ