Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
தமிழகத்துக்கு உரிய அளவில் காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, நீர் திறப்பு தொடர்பாக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் முழுமையாகக் கிடைக்கவில்லை என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, 15 நாட்களைக் கணக்கீட்டு காலமாகக் கொண்டு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் திறப்பு குறித்து விவாதித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று நடைபெறும் 60-வது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காவிரியில் இருந்து இதுவரை திறக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் அதுதொடர்பான தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெற உள்ளது. மேலும், கர்நாடகத்தில் உள்ள ஹாரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு, இதுவரை வழங்கப்பட்ட நீர் மற்றும் நிலவும் பற்றாக்குறை ஆகிய விவரங்களை தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைக்க உள்ளனர்.
தமிழகத்தின் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள நீரை வழங்குவதுடன் கூடுதலாகவும் காவிரியில் இருந்து நீர் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V