கோவை மாணவர் தற்கொலை- தலைமை ஆசிரியர் , வகுப்பு ஆசிரியர் சஸ்பெண்ட்!
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.) கோவை பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன் அகிலன் (16). இவர் பீளமேடு கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சக மாணவர்கள் சாதிப் பெயரைக் கூறி அவரைக் கேலி செய்ததாகக் கூறப்
Kovai student


கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)

கோவை பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன் அகிலன் (16). இவர் பீளமேடு கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் சக மாணவர்கள் சாதிப் பெயரைக் கூறி அவரைக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அகிலன், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பீளமேடு போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உறவினர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் (43), வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் (42) மற்றும் இரண்டு மாணவர்கள் என நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) ரம்யா பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மாணவர் உயிரிழப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவர் அகிலன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் ஆகிய இருவரையும் இன்று பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவரின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / LOGESHWARI V