செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு - 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை...!
விழுப்புரம், 23 அக்டோபர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு - பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). இவர் கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு பெற்றோரு
Senji child


விழுப்புரம், 23 அக்டோபர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு - பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). இவர் கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 5 மணியளவில் எழுந்த பெற்றோர், சிறுமியைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல நாட்களாகியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைப் பொறுப்பை ஏற்றனர்.

முதற்கட்டமாக, உள்ளூர் போலீசார் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் சேகரித்த தகவல்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஆலம்பூண்டியில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, சம்பவம் தொடர்பாக அவரது தாயார் பவானியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டறிந்தனர்.

சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள், வீட்டுக்கு வந்த உறவினர்கள், சிறுமி தூங்கச் சென்ற நேரம், அதிகாலையில் அவர் காணாமல் போனது தெரியவந்த சூழல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அத்துடன், சிறுமியின் வீட்டின் மாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சம்பவத்தன்று அதிகாலை சிறுமி அழும் சத்தம் கேட்டதாக ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், உள்ளூர் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

தற்போது 2-வது நாளாக நடைபெறும் விசாரணையில், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாகக் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

சிறுமி வசித்த பகுதியின் வரைபடத்தைத் தயாரித்து, அங்குள்ள வழித்தடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளை ஆய்வு செய்து, சிறுமி மாயமானது தொடர்பான தடயங்களைச் சேகரிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

சிறுமி எங்கு சென்றார், என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V