Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.1,400-லிருந்து ரூ.1,800-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
2026-2027ஆம் ஆண்டுக்கான சமூக நீதித்துறை மானியக் கோரிக்கையின்போது, மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் வகையில் விடுதி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 859 பள்ளி விடுதிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 18 பள்ளி விடுதிகள் மற்றும் 292 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 1,169 விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குப் பயனளிக்கும்.
மேலும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 316 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், 38 பள்ளி விடுதிகள், வனத்துறையின் கீழ் இயங்கும் 11 பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 3 பள்ளி விடுதிகள் மற்றும் 11 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 379 பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.
உயர்த்தப்பட்ட உணவுக் கட்டணத்திற்கு ஏற்ப, மாணவர்களுக்கான உணவுப் பட்டியல் மற்றும் மாதாந்திர தனிநபர் நுகர்வுப் பொருட்களின் அளவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P