அகமதாபாத் சர்வதேச புத்தகத் திருவிழா 2026 - பதிப்பாளர்கள் பங்கேற்பு!
குஜராத், 24 அக்டோபர் (ஹி.ச.) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழா 2026-ல், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பதிப்பாளர்களும் புத்தக அரங்குகளும் பங்கேற்றுள்ளதாக தேசிய புத்தக அறக்கட்டளையின் (NBT) தல
Book


குஜராத், 24 அக்டோபர் (ஹி.ச.)

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழா 2026-ல், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பதிப்பாளர்களும் புத்தக அரங்குகளும் பங்கேற்றுள்ளதாக தேசிய புத்தக அறக்கட்டளையின் (NBT) தலைவர் மிலிந்த் மராத்தே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை ஒரே இடத்தில் வாசகர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் இந்தத் திருவிழா ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் மாநகராட்சியுடன் இணைந்து தேசிய புத்தக அறக்கட்டளை இந்தப் புத்தகத் திருவிழாவை மூன்றாவது முறையாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு திருவிழாவில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பதிப்பாளர்களும் புத்தக விற்பனை அரங்குகளும் இடம்பெற்றுள்ளதாக மிலிந்த் மராத்தே குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பல்வேறு பதிப்பகங்களின் நூல்களை ஒரே இடத்தில் பார்வையிடவும், தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்வு செய்யவும் வாசகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலக்கியம், கல்வி, வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புத்தகத் திருவிழா பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புத்தகத் திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, இந்தியாவின் விடுதலை மற்றும் சமூக வரலாற்றில் பங்களித்த தியாகியும் சமூகச் சீர்திருத்தவாதியுமான தேஜா சிங் சமுந்த்ரியின் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேஜா சிங் சமுந்த்ரியின் வாழ்க்கை மற்றும் சமூகப் பணிகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று மிலிந்த் மராத்தே தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வரலாற்று ஆளுமைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அவர்களின் பங்களிப்புகளை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவும்.

அகமதாபாத் மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு இந்தப் புத்தகத் திருவிழா ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக NBT தலைவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு பாடப்பிரிவுகள் மற்றும் தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை ஒரே இடத்தில் பார்வையிடுவதன் மூலம் வாசகர்கள் தங்களின் அறிவையும் வாசிப்பு ஆர்வத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

பதிப்பாளர்கள், புத்தக வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் இத்தகைய நிகழ்வுகள், புத்தக வாசிப்புக் கலாசாரத்தை வளர்ப்பதிலும் வரலாற்று விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V