Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 24 அக்டோபர் (ஹி.ச.)
சண்டிகரில் உள்ள சனாதன் தர்மா கோயில் வளாகத்தில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் சனாதன் தர்மா கோயில் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்தச் சம்பவத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாகச் சண்டிகர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் நேரடித் தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக, அக்டோபர் 23-ஆம் தேதி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்களும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த விவரங்களும் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை, அந்த ஆயுதத்தை மீட்பதற்காக போலீசார் குழுவாகச் சென்றனர்.
ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீட்பு நடவடிக்கை நடைபெற்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தள்ளிவிட்டு, ஆயுதத்தை எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதையடுத்து, போலீசார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் ஏஎஸ்ஐ ஒருவர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவசம் காரணமாக உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தொடையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய சண்டிகர் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்பு வலையமைப்பைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V