பண்டிகைக் காலத்தில் உணவுக் கலப்படத்தைத் தடுக்க தீவிர ஆய்வு - FSSAI அதிரடி!
புதுடெல்லி, 24 அக்டோபர் (ஹி.ச.) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த ஆறு மாதங்களாகத் திட்ட
Fssai


புதுடெல்லி, 24 அக்டோபர் (ஹி.ச.)

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தலைமைச் செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பண்டிகைக் காலங்களில் இனிப்புகள், எண்ணெய், பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரிப்பதால், அவற்றில் கலப்படம் நடைபெறுவதைத் தடுப்பதற்கு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்காக மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற வகையில் ஆய்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சில மாநிலங்களில் சுமார் 70 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைந்து திடீர் சோதனைகளில் ஈடுபடுகின்றன. மற்ற பகுதிகளில் அதிகாரிகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணிகள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.

உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரவு பகலாகத் தொடர் சோதனைகள் நடத்தப்படுவதாக FSSAI அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பிப் பரிசோதிக்கப்படுகின்றன.

குறிப்பாக, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் அனுமதிக்கப்படாத அல்லது தரமற்ற பொருட்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.

கலப்படம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, நுகர்வோர் நம்பகமான நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தேர்வு செய்வதுடன், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.

உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பனீரின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான வரைவு அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டுள்ளதாகவும், இறுதி அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும் ரஜித் புன்ஹானி தெரிவித்துள்ளார்.

இறுதி அறிவிப்பு வெளியான பிறகு, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பனீர் நேரடியாகப் பரிசோதிக்கப்படும்.

மேலும், பனீர் எந்த நிறுவனத்திடமிருந்து அல்லது எந்த ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறது என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும். அதன் அடிப்படையில் ஆய்வுகள் மற்றும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கலப்படத்தைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V