Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நாமக்கல் கிழக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மறுசீரமைப்புத் திட்டமான SSA-2 மாவட்டப் பார்வையாளர்களுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சி அமைப்பை அடிமட்டம் முதல் முழுமையாக மறுசீரமைக்கும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளைச் செம்மையாகச் செயல்படுத்தும் நோக்கில், வெளி மாவட்டங்களில் இருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முன்னாள் மாவட்டத் தலைவர்கள் மாவட்டப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டங்களுக்குக் குறைந்தது 5 முறையாவது நேரடியாகச் சென்று, முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, 10 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஒரு ‘மண்டல்’ என உருவாக்கி, அதற்கு 55 வயதுக்குட்பட்ட சிறந்த செயல்வீரர்களைத் தேர்வு செய்ய ஜனநாயகப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, நானும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அண்ணன் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் விவாதித்து முழுமையான நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர், மாவட்டப் பார்வையாளர் மற்றும் பிசிசி உறுப்பினர்கள் இணைந்து ஒருசேர எடுத்த முடிவின் அடிப்படையில், முழுமையான ஜனநாயகப் பண்போடு இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; அதனால் சில வருத்தங்கள் கூட எழலாம். காங்கிரஸ் பேரியக்கத்தின் உயரிய கொள்கைகளுக்காகக் களத்தில் நின்று போராடும் ஒவ்வொரு தொண்டனுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
எனினும், விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியான செயல்வீரர்களைக் கொண்ட ஒரு பெரும் படைவீரர்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மாவட்டப் பார்வையாளர்களுக்கும், மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நாமக்கல் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய / பகுதி, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களுக்கான மறுசீரமைப்புப் பட்டியல்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ள வாக்குக் காப்போம்! நாட்டைக் காப்போம்! என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் தெருமுனைப் பிரச்சாரங்களாக களத்தில் இறங்கி மக்கள் பணியாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு உள்ளது.
வரவிருக்கும் இந்த இரண்டு மாதங்களும் நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான காலகட்டமாகும்.
மக்கள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் நலப் போராட்டக் களத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து வலுவான படைவீரர்களாக நாம் துணை நிற்க வேண்டும்.
தியாகமும் கடமையுணர்ச்சியும் கொண்ட நமது காங்கிரஸ் தொண்டர்களால் மட்டுமே இத்தகைய மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாத மக்கள் சக்தியாகவும், உரிய பலத்தோடும் மரியாதையோடும் திகழும் பேரியக்கமாகவும் உயர்த்தும் இந்தச் சீரிய முயற்சிக்கு, காங்கிரஸ் தோழர்களும் நிர்வாகிகளும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கி ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN