Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 25 அக்டோபர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் 6 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன வழக்கில் விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கூறி, தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை
(அக்டோபர் 26 ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா.
கடந்த 11ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, பின்னர் பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கியபோது திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
சிறுமியைத் தேடிக் கண்டுபிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு கட்டங்களாகத் தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், சிறுமி குறித்து எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆய்வு செய்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று சிறுமியின் தாய் பவானியை அருகிலுள்ள அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார், அவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணை முழுவதும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நான்காவது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுமியின் வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைப் புகைப்படம், காணொளி மூலம் ஆவணப்படுத்தி ஆய்வு செய்து வரும் போலீசார், ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 600 பேரின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
சிறுமி காணாமல் போன வழக்கில் விசாரணை விரைந்து முடுக்கிவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN