Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் சதுரங்கத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் மூலம் பிரதிபோத் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பார்வையற்ற சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தங்களது சதுரங்கத் திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள், விளையாட்டின் மீதான தங்களது ஆர்வத்தையும் திறனையும் வெளிப்படுத்தினர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறமைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அவர்களுக்கெனத் தனிப் பயிற்சி அரங்கம் அமைக்க வேண்டும் எனப் போட்டி ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், முறையான பயிற்சி, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொடர் ஊக்குவிப்பு ஆகியவை கிடைத்தால், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனைகள் படைக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள், உரிய பயிற்சி வசதிகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இப்போட்டி எடுத்துக்காட்டியது.
Hindusthan Samachar / LOGESHWARI V