கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை- 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு!
கொடைக்கானல், 25 அக்டோபர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, அடுக்கம் பெரியகுளம் பிரதான மலைச்சாலையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் ச
Kodaikanal


கொடைக்கானல், 25 அக்டோபர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

குறிப்பாக, அடுக்கம் பெரியகுளம் பிரதான மலைச்சாலையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

மேலும், செடி, கொடிகள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் சிதறிக் கிடப்பதுடன், சில இடங்களில் சாலையின் ஒரு பகுதியும் சரிந்து சேதமடைந்துள்ளது.

மலைச்சாலையின் சில பகுதிகளில் நீண்ட தூரத்திற்குப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அடுக்கம் கிராமத்திற்குச் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், தாங்கள் விளைவித்த காய்கறிகளை வெளிச்சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கும் கிராம மக்கள், தங்களது கிராமத்தில் அரசு அதிகாரிகள் முறையாக முகாமிட்டு பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, மழைநீருடன் அடித்துவரப்பட்ட மண், கற்கள் மற்றும் பாறைகள் கிராமப் பகுதியில் குவிந்துள்ளன. இதில், கிராமத் தலைமை ஆசிரியரின் சொகுசு வாகனம் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவு ஏற்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சாலையில் கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளதால் சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதில் சவால்கள் நீடிக்கின்றன.

மேலும், மழை தொடர்ந்து பெய்தால் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தாமதமாகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சேதமடைந்த சாலையை முழுமையாகச் சீரமைக்க சில வாரங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுக்கம் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகள் மற்றும் விவசாயப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைத் தொடர்பை மீட்டெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V