Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் நேற்று இரவு பழனி வழியாகக் கொடைக்கானலுக்குச் சென்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலைப்பாதையில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, இரவு நேரப் பயணங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக, மலைப்பாதையில் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்குப் பிறகு மலைப்பாதையின் சூழல் ஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடிவாரத்தில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பழனி–கொடைக்கானல் சாலையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களையும் போலீசார் வழங்கி வருகின்றனர்.
தொடர் மழை பெய்து வருவதால், மலைப்பாதையில் வாகனங்களை மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும் எனக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சுற்றுலாப் பயணிகள் தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் பாதுகாப்பாகப் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ள சூழலில், பயணிகள் தங்களது விருப்பத்தின் பேரில் மலைப்பகுதிக்குச் செல்வதைவிட, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக மலைப்பாதையில் பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V