மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைச்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்- வாகன ஓட்டிகளுக்குக் காவல்துறை எச்சரிக்கை
மேட்டுப்பாளையம், 25 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மலைச்சாலையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனப போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்ப
Metupalaiyam


மேட்டுப்பாளையம், 25 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மலைச்சாலையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனப போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி, இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் மலைச்சாலைகளில் வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று இரவு மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இரவு நேரப் போக்குவரத்துத் தடை காரணமாக, ஊட்டி உள்ளிட்ட நீலகிரி பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் ஓடந்துறை பகுதியில் காத்திருந்தன.

தொடர்ந்து, இன்று காலை 6 மணிக்குப் பிறகு வாகனங்கள் படிப்படியாக மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் இரவு முதல் காத்திருந்த வாகனங்கள் மீண்டும் பயணத்தைத் தொடங்கின.

வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.

மலைப்பாதையில் செல்லும்போது வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும் என்றும், கொண்டை ஊசி வளைவுகளில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, வளைவுகளில் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குவது விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், ஓட்டுநர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், சாலையின் நிலை மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V