Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 25 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட வான்வழி சாகச நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.
'விங்ஸ் ஓவர் கேங்க்ஸ்'
(Wings over Ganges) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் பல்வேறு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் திறன்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்த வான்வழி சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானங்களான தேஜஸ், சுகோய்-30 எம்.கே.ஐ., ரஃபேல் மற்றும் இலகுரகப் போர் ஹெலிகாப்டரான பிரசண்ட் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
மேலும், விமானப்படையின் போக்குவரத்து விமானங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
விமானப்படையின் புகழ்பெற்ற சூர்யகிரண் வான்வழி சாகசக் குழுவும், சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழுவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளன.
துல்லியமான விமான இயக்கம், வான்வழி சாகசங்கள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை மட்டுமின்றி, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விமானங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும், கூட்டு நடவடிக்கைகளுக்கான திறன்களும் வெளிப்படுத்தப்பட உள்ளன.
கங்கை நதியின் பின்னணியில் நடைபெறும் இந்த வான்வழி நிகழ்ச்சி, இந்தியாவின் விமானத் தொழில்நுட்ப வளர்ச்சியையும், பாதுகாப்புப் படையினரின் பயிற்சி மற்றும் செயல்திறனையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்னதாக, வாரணாசியில் அரவிந்த் நிறுவனத்தின் புதிய ஆடை உற்பத்தி ஆலையைப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
நவீன உற்பத்தி முறைகளைக் கொண்ட இந்த ஆலை, குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அப்பகுதியின் தொழில்துறை வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படையின் 94 ஆண்டுகால சேவையைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, நாட்டின் பாதுகாப்புத் திறன், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் முப்படைகளின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நிகழ்வாக இவை இருக்கும் என சொல்லப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V