திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் தொடர் கனமழை - 10 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
மதுரை, 25 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வ
Farmers


மதுரை, 25 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கள்ளிக்குடி ஒன்றியம், எம்.வேப்பங்குளம் கிராமத்தில் பெய்த கனமழையால் மழைநீர் வெளியேற முடியாமல் விவசாய நிலங்களில் தேங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்குவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனால் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மொச்சை, பாசிப்பயறு, தட்டாம்பயறு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளின் பயிர்கள் நீரில் மூழ்கியதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகி, மகசூல் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, செங்கப்படை அருகே உள்ள எஸ்.கோபாலபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவில் பகுதியில் உள்ள குளம் கனமழையால் நிரம்பியுள்ளது. இதன் காரணமாகக் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

மேலும், குளத்தின் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த மின்கம்பம் குளத்திற்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர் கனமழையால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாய்களைத் தூர்வாரி மழைநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், மண் அரிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.கோபாலபுரம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V