மருதுபாண்டியர் 225-வது குருபூஜை - 2,500 போலீசார் பாதுகாப்புப் பணி – தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச) சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், காளையார்கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பித
Jj


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச)

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், காளையார்கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன் ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.

மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 27-ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 225-வது குருபூஜையை முன்னிட்டு, மருதுபாண்டியர் நினைவிடத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்டத்தின் முக்கியப் பகுதிகள் உட்பட 300 இடங்களில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முக்கிய வழித்தடங்களில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர்கள், மோப்ப நாய்கள் மூலம் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் வாகனங்களைக் கண்காணிப்பதுடன், கண்காணிப்புக் கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்புவனம், சிவகங்கை, கல்லல், இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 163 (144) தடை உத்தரவு அமலில் உள்ளது.

விழாவிற்கு வருகை தருவோர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், வாகனங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல், கோஷங்கள் எழுப்புதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

விழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ