கோயில் சொத்துகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்க ஒரு மாதம் அவகாசம் - மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, 26 அக்டோபர் (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேசுவரர், வைகுண்டபதி பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கவும், கோயில் கட்டடங்களுக்கான வாடகையை முறையாக வசூலிக்கவும் உத்தரவிடக் கோர
உயர்நீதிமன்றம்


மதுரை, 26 அக்டோபர் (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேசுவரர், வைகுண்டபதி பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கவும், கோயில் கட்டடங்களுக்கான வாடகையை முறையாக வசூலிக்கவும் உத்தரவிடக் கோரி, திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கோயில்களின் பூஜைகள் உள்ளிட்ட தேவைகளுக்காக எழுதிவைக்கப்பட்டு, தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறப்படும் 630 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும் என்றும், கோயில்களுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கான வாடகையை முறையாக வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதேபோல், மதுரை, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை முழுமையாகச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயில் சொத்துகள் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, அரசுத் தரப்புக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கினர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P