ஆந்திராவில் ரெட் அலர்ட்- புயல் காரணமாக மிகக் கனமழை எச்சரிக்கை!
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அர்னாப் புயலாக உருவாகி, ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுக
Cyclone


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அர்னாப் புயலாக உருவாகி, ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் அவ்வப்போது 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27-ஆம் தேதிக்கான முன்னறிவிப்பின்படி, காக்கிநாடா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா, ஏலூரு, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் யானம் பகுதியில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையின் தீவிரம் மற்றும் எச்சரிக்கை நிலை மாவட்டத்துக்கு ஏற்ப மாறுபடலாம்.

புயல் நெருங்குவதால் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலத்த காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பழுதடைந்த கட்டடங்களின் அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து செயல்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

மேலும் புயலின் நகர்வு மற்றும் மழையின் தீவிரத்தைப் பொறுத்து எச்சரிக்கைகள் மாற்றப்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V