Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 26 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஒகேனக்கல் பகுதியில் பெய்த கனமழையால் அதிகபட்சமாக 14.24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பென்னாகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.
இதற்கிடையே, தமிழகக் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், தக்கட்டி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து உயர்ந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. காவிரி ஆற்றிலும் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் நேற்று இரவு முதல் பென்னாகரம் அருகே உள்ள போடூர்பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல் பாறை, முத்தூர் மலை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
இதன் விளைவாக, இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சின்னாற்றில் பெருக்கெடுத்து ஓடும் இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கிறது.
தமிழக–கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரியின் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் மழைப்பொழிவு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் நிலவரத்தைப் பொறுத்து நீர்வரத்தின் அளவு மாறாக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V