Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 26 அக்டோபர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் மோகாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தை மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் இன்று நேரில் பார்வையிட்டார்.
இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நேற்று மாலை சுமார் 7 மணியளவில், சாஹில் ஜிண்டால் தனது கூட்டாளிகள் நான்கு அல்லது ஐந்து பேருடன் வெளியே அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த கருப்பு நிற கார் ஒன்று அவர்களுக்கு முன்பாக நின்றது. அந்தக் காருக்குள் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஆறு காலி தோட்டாக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர்.
அவர்களில் சாஹில் ஜிண்டால் மற்றும் ககன் தீப் சிங் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற மூவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சோம்நாத் ஜிண்டால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மோகா சிட்டி சவுத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) எண் 365 பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சட்டப் பிரிவுகள் 103, 109, 190, 191, 3 மற்றும் ஆயுதச் சட்டத்தின் 25, 27 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை புனீத் காபா, கிரண்பால் சிங், தஜிந்தர் சிங், பல்ஜித் கவுர் மற்றும் ஜீவன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காண்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், உண்மையான தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, செல்போன் கோபுரத் தரவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்.
தாக்குதல்தாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், ஆயுதங்களை வழங்கியவர்கள் மற்றும் சம்பவத்திற்கு முன்பாக நோட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அவர்களுக்கு ஆதரவளித்த அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V