நீலகிரி மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் - தெங்குமரஹடா மலைக்கிராமத்தில் போக்குவரத்து துண்டிப்பு!
நீலகிரி, 26 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராம மக்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கும் வெளிப்பகுதிகளுக்குச் செல்வதற்கும் மாயாற்றைக் கடக்க வேண்டியுள்ளது. இதற்காகப் பரிசல்களைப் பயன்படுத்தி வருகின
Flood


நீலகிரி, 26 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராம மக்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கும் வெளிப்பகுதிகளுக்குச் செல்வதற்கும் மாயாற்றைக் கடக்க வேண்டியுள்ளது. இதற்காகப் பரிசல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளம் அபாயகரமான நிலையில் செந்நிறத்தில் பாய்வதால், பாதுகாப்பு கருதி பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியாறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

மேலும், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிந்து விழுந்துள்ளதால், ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் நிலச்சரிவுகளை அகற்றும் பணிகள் முடியும் வரை, வாகனங்கள் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பொதுமக்கள் அவசர உதவிகளுக்கு நீலகிரி மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 1077 அல்லது 0423-2450024 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மழையின் தாக்கம் குறைந்து நிலைமை சீராகும் வரை மலைப்பாதைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V