தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு, 27 அக்டோபர் (ஹி.ச.) தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியையும் கடும் கவலையையும் அளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எ
மாணிக்கம்


தமிழ்நாடு, 27 அக்டோபர் (ஹி.ச.)

தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியையும் கடும் கவலையையும் அளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு விழுப்புரத்திற்குப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் காவல்துறையின் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது உள்ளிட்ட சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது பெருந்துறை அருகே கைதி தப்பியதும், செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியதும் தமிழகத்தில் ஏற்கெனவே பலமுறை பாதுகாப்புக் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழகச் சிறைத்துறையில், குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புறச் சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் தொடர்ந்து பலவீனமாக இருப்பது தெளிவாவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய சிறைகளில் உடனடியாகக் கட்டமைப்பு மாற்றங்களையும் தீவிரமான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, பாதுகாப்புச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்த உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தப்பியோடிய கைதிகள் அனைவரையும் உடனடியாகப் பிடிப்பதுடன், புறநகர்ச் சிறைகள் உள்ளிட்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்கத் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P