டெல்லி காவல்துறையினரின் மிரட்டல் புகார் – ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் வழக்கறிஞர்களை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலைநிறு
Delhi


புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.)

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் வழக்கறிஞர்களை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஸ் அவென்யூ நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் விஜய் பிஷ்னோய்,

ஷாதரா காவல் நிலையத்தில் தங்களது சங்கத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் மீது நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, அக்டோபர் 23ஆம் தேதி சில வழக்கறிஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதும், அதில் ஒரு வழக்கறிஞரின் தலையில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்ததாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படத்தையும், முந்தைய நாள் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையுடன் இணைத்துப் பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காயமடைந்த வழக்கறிஞர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் விஜய் பிஷ்னோய் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட உதவி காவல் ஆணையர் (ACP) மற்றும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி (SHO) ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், அக்டோபர் 24ஆம் தேதி புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெறச் சென்றபோது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தெரியவந்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து, அன்றைய மாலை சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி மற்றும் உதவி காவல் ஆணையரைச் சந்தித்து வழக்கறிஞர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

அப்போது, உதவி காவல் ஆணையர் தனது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி, அதை வெளிப்படுத்தி வழக்கறிஞர்களை மிரட்டியதாக விஜய் பிஷ்னோய் குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த அதிகாரி தனது செயல்களை நியாயப்படுத்தியதுடன், சில வகைகளில் பதற்றத்தைத் தூண்டும் விதமாக நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் டெல்லி காவல் ஆணையரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த விஜய் பிஷ்னோய், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இனி தனது பணிக்காலம் முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் வழங்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V