டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தத் தடை? -மத்திய அரசுக்கு கே.சி.வேணுகோபால் கண்டனம்!
புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.) நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் பேரணிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ராம்லீலா மைதானத்திற்குச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காவல்துறையின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள
Venugopal


புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.)

நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் பேரணிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ராம்லீலா மைதானத்திற்குச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காவல்துறையின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி, நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் மக்கள் தீர்ப்பாயம் மற்றும் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பேரணிக்கான மேடை மற்றும் பிற உள்கட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளச் சென்ற கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட கே.சி.வேணுகோபால், இந்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதற்காக அச்சப்படுகின்றனர் எனத் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்துவதற்கான அனுமதி ஏற்கெனவே பெறப்பட்டுள்ள நிலையில், ஏற்பாட்டுப் பணிகளைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நடவடிக்கை டெல்லி காவல்துறையின் சொந்த முடிவு அல்ல என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் முடிவாகவே இதைக் கருதுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் அழுத்தங்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் அடிபணியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டப் பேரணியை நடத்துவது எப்படி என்பது கட்சிக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்களையும் தடுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக விமர்சித்தார்.

டெல்லியில் போராட்டம் நடத்துவதற்குப் பல்வேறு இடங்கள் உள்ள நிலையில், தங்களைத் தடுக்க காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நாட்டின் தேர்தல் நடைமுறை தூய்மைப்படுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கே.சி.வேணுகோபால் உறுதிபடத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V