Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 27 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நாப்பிராம்பட்டி கிராமச் சாலை தற்போது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலையின் நிலையைச் சரிசெய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு கிடைக்காததால், அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, இன்று காலை முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், சாலையைச் சீரமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியான முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது அரசுப் பேருந்து ஒன்றையும் பொதுமக்கள் சிறைபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஊத்தங்கரை காவல்துறையினர் கூடுதலாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் வராததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
கிராமச் சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் நாப்பிராம்பட்டி பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V