Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரமேரூர், 27 அக்டோபர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம், மானாம்பதி–புக்கத்துறை நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் அருகே வேடப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் உதவிப் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
உத்திரமேரூரில் இருந்து இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் உள்ள பள்ளங்களால் தடுமாறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலர் பள்ளங்களில் வாகனங்கள் சிக்குவதால் காயமடைவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர்.
இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும்
தினமும் சென்று வருகின்றனர். இருப்பினும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாலையைப் பராமரிக்க வேண்டிய துறையின் அலுவலகத்திற்குச் செல்லும் வழியிலேயே பள்ளங்கள் காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலையைச் சீரமைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, மானாம்பதி–புக்கத்துறை நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் அருகே சேதமடைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து, பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V