தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை -காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு!
பெங்களூரு, 27 அக்டோபர் (ஹி.ச.) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தற்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் பல்வேறு முடிவுகளை எடுத்து வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மர்பாடி வீரப்ப மொ
Congress


பெங்களூரு, 27 அக்டோபர் (ஹி.ச.)

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தற்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் பல்வேறு முடிவுகளை எடுத்து வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மர்பாடி வீரப்ப மொய்லி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளைக்கூடக் கேட்டறியாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகிறார்.

நான் மத்திய சட்ட அமைச்சராகப் பதவி வகித்துள்ளேன். தேர்தல் ஆணையம் தொடர்பான பொறுப்புகளையும் கவனித்துள்ளேன்.

அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர்களும், தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களும் எவ்வாறு இணைந்து செயல்பட்டார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

வாக்களிக்கும் உரிமையை கட்டாயமாக்க வேண்டும் என்பதே அப்போது எங்களுடைய அணுகுமுறையாக இருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கேற்ப மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தீர்மானிக்கும் வகையில் இவர்கள் செயல்பட விரும்புகிறார்கள். இது முற்றிலும் சட்டவிரோதமானது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைதியாக இருக்கவோ, நடப்பவற்றை வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக இருக்கவோ முடியாது. நாட்டின் சட்டங்களும் அரசியலமைப்புச் சட்டமும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபர்களால் மீறப்படும்போது, உச்சநீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது.

இதுபோன்ற சூழலில் உச்சநீதிமன்றம் தலையிடத் தவறினால், நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V