Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 63 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்வு 2026-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கும் முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என மொத்தம் 1.16 கோடி பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,016 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின்படி இந்த உயர்வு வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி என்பது பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிப்பதால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வை ஈடுகட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும்.
அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம், அவர்களின் ஓய்வூதியத்தின் வாங்கும் திறனைப் பாதுகாக்க உதவுகிறது. இந்தத் தொகைகள் பொதுவாக ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்படுகின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்படுவதால், தகுதியுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையும் கிடைக்கும்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P