அரசின் நிர்வாகத்தில் முதல்வரின் கவனம் முழுமையாக இருப்பதில்லை - நெல்லையில் அப்பாவு பேட்டி
நெல்லை, 28 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் மின் தட்டுப்பாடு, ஆவின் பொருட்களின் விலை உயர்வு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக வெற்றிக் கழக அரசைக் குற்றம்சாட்டினார். நெல்லையில் செய்தியாளர்களை
Appavu


நெல்லை, 28 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு, ஆவின் பொருட்களின் விலை உயர்வு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக வெற்றிக் கழக அரசைக் குற்றம்சாட்டினார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு,

தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அப்பாவு, இதன் பின்னணியில் அதானி குழுமம் இருப்பதாகக் கூறினார்.

மின்துறை தொடர்பான விவகாரங்களில் அதானி குழுமத்துக்குச் சாதகமாக அமைச்சர் நிர்மல் குமார் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பால் கொள்முதல் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஆவின் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அப்பாவு தெரிவித்தார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அரசை நடத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், ஆவின் பொருட்களின் விலை உயர்வு குறித்தும் விமர்சனம் முன்வைத்தார்.

தமிழகத்தில் எந்தெந்த விமான நிலையங்களைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அப்பாவு, அரசின் நிர்வாகத்தில் முதல்வரின் கவனம் முழுமையாக இருப்பதில்லை என்றும், அவரைச் சுற்றியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த குழுவினரின் செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படுவதாகக் கூறிய அப்பாவு, தற்போது தமிழகத்திலேயே போதைப்பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், முதலமைச்சர் வெள்ளிக்கிழமை வெளியூர் சென்றால், திங்கட்கிழமைதான் அவரைப் பார்க்க முடிவதாகக் குறிப்பிட்ட அவர், இடைப்பட்ட இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, இந்த விவகாரத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஏன் கைது செய்யப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குக் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக அப்பாவு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / ANANDHAN